செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா சிகிச்சை மையங்களில் 5 ஆயிரம் படுக்கைகள் காலியானது

Published On 2021-06-29 15:27 IST   |   Update On 2021-06-29 15:27:00 IST
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1762 படுக்கைகளில் 1033 படுக்கைள் காலியாக உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்கள், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவிட் கேர் சென்டர்கள் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பானது சராசரியாக 550 என்ற நிலையில் இருந்து வருகின்றது. ஆனால் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 700 தாண்டி உள்ளது. எனவே காலி படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1762 படுக்கைகளில் 1033 படுக்கைள் காலியாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 3977 படுக்கைகளில் 2535 காலியாக உள்ளது. இதே போல கோவிட் கேர் சென்டர்களில் 7038 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 38 கோவிட் கேர் சென்டர்களில் 15-க்கும் மேற்பட்ட சென்டர்களில் கடந்த சில நாட்களாக ஒருவர் கூட சிகிச்சை பெறாமல் காலியாகவே உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்று பாதிப்பு குறைந்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாலும் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் புதியதாக 400 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு தயார்நிலையில் உள்ளதால் 3-வது அலை வந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Similar News