செய்திகள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசியபோது எடுத்த படம்

அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை

Published On 2021-06-25 12:40 GMT   |   Update On 2021-06-25 12:40 GMT
கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஆணையர்கள் அருண்மொழி, கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ஜீவா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

நடராஜன் (அ.தி.மு.க):- சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு 15-வது நிதிக்குழு தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் கட்சி பாகுபாடு பார்க்காமல் தலைவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் சரிசமமாக வளர்ச்சி பணிகளை ஒதுக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற்று கடந்த ஒன்றரை வருடம் ஆகிறது. ஆனால் எங்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே வளர்ச்சி பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை எங்கள் பகுதிக்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் எந்த ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது என்பது தெரியவில்லை. மற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் தகராறு செய்கின்றனர். திருநகரி கூனகரம்பை வாய்க்காலில் பாலம் மட்டும் கட்டப்பட்டு இணைப்பு சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட இணைப்பு சாலையை விரைந்து முடிக்க வேண்டும். மங்கைமடம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் செயல்படுத்த வேண்டும் என்றார்.

ஜான்சிராணி (சுயேச்சை):- திருவெண்காடு ஜீவா நகர் அருகில் சாலையின் மையப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க வேண்டும். வேளாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் தொலைபேசி எண்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும்.

அறிவழகன் (தி.மு.க):- ராதாநல்லூர் ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும். மேலும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆணையர்கள் கூறுகையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு 15-வது நிதிக்குழு மூலம் ரூ.80 லட்சம் வந்துள்ளது. மங்கைமடம் ஊராட்சியில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூனகரம்பை வாய்க்காலில் இணைப்பு சாலையில் விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தலைவர் கமலஜோதி தேவேந்திரன்:- அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சி பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி நிதியில் ஒதுக்கப்படும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முன்னதாக கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், தாரா, சிவக்குமார், மேலாளர்கள் சசிகுமார், சுதாகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இளநிலை உதவியாளர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News