செய்திகள்
உரிகம் வனப்பகுதியில் பிரசவத்தின் போது வயிற்றில் குட்டியுடன் இறந்த பெண் யானையை படத்தில் காணலாம்.

உரிகம் வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழப்பு

Published On 2021-06-25 17:55 IST   |   Update On 2021-06-25 17:55:00 IST
உரிகம் வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானையும், வயிற்றுக்குள் இருந்த குட்டியும் பரிதாபமாக பலியாகின.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. ஓசூர் வனக்கோட்டம், உரிகம் காப்புக்காட்டில் ஜோடுகரை ஏரிப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியிலஈடுபட்டனர்.

அப்போது 20 முதல் 24 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபுவிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் தலைமையில், ஓசூர் கோட்ட தலைமையிட உதவி வன பாதுகாவலர் காத்திகேயினி, உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், வன பணியாளர்கள், கால்நடை டாக்டர் பிரகாஷ் உள்ளிட்டோர் சம்பவஇடத்திற்கு சென்றனர்.

இதைத்தொடந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் வயிற்றுக்குள் ஆண் யானைக்குட்டி ஒன்று இறந்த நிலையில்இருந்தது.

தொடர்ந்து யானையின் உடலும், குட்டி யானையின் உடலும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ‘பெண் யானை சினையாக இருந்ததும், குட்டியை ஈனும் போது எதிர்பாராதவிதமாக குட்டி வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு இருக்கலாம். இதில் குட்டி யானையும், தாய் யானையும் பரிதாபமாக இறந்துள்ளன’ என்றார்கள்.

உரிகம் வனப்பகுதியில் பிரசவத்தின் போது தாய் யானையும், குட்டியும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Similar News