செய்திகள்
தாளாபள்ளி பகுதியில் விவசாயிகள் கீரைகளை பறித்த போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரி அருகே கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Published On 2021-06-25 12:22 GMT   |   Update On 2021-06-25 12:22 GMT
கிருஷ்ணகிரி அருகே விவசாயிகள் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழ்நிலையில், கொரோனா கற்றுக்கொடுத்த பாடம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதே ஆகும். இதனை அறிந்து கொண்ட பொதுமக்கள் தற்போது சத்தான உணவுகளை சாப்பிட, அதற்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இயற்கையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை வாங்குவதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி அருகே தாளாபள்ளி பகுதியில் கீரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பொதுமக்களின் ஆர்வம் மற்றும் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்றவாறு, சத்தான இயற்கையான காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வலிமைக்கு தேவையான வைட்டமின்கள் அதிகரிக்கும் வகையில் குறைந்த செலவில், அதிக மகசூல் பெறும் வகையில் கீரை சாகுபடி செய்து வருகிறோம். சிறு கீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, அரைக்கீரை போன்றவற்றை சாகுபடி செய்து, தினமும் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு 10 நாட்களில் பலன் தரக்கூடிய இந்த கீரைகளை சாகுபடி செய்ய விதைகள், உரங்கள் என ரூ.10 ஆயிரம் மூலதனமாக கொண்டு சாகுபடி செய்துள்ளோம். தற்போது கீரைகளை பிடுங்கி, சிறுசிறு கட்டுகளாக கட்டி ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்கிறோம். அத்துடன் மொத்த வியாபாரிகளும் கீரை சாகுபடி செய்த விவசாய நிலங்களுக்கே நேரில் வந்து விற்பனைக்கு வாங்கி செய்கிறார்கள்.

இதன் மூலம் தினமும் ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்து அறுவடை செய்வதால் குறைந்தபட்சமாக ரூ.45 ஆயிரம் வருவாய் ஈட்ட முடிகிறது. இதனால் இப்பகுதியில் தற்போது விவசாயிகள் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இவ்வாறு விவசாயிகள்கூறினர்.
Tags:    

Similar News