செய்திகள்
கோப்புப்படம்

மரவள்ளிக்கிழங்கில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?- அதிகாரி விளக்கம்

Published On 2021-06-23 13:00 IST   |   Update On 2021-06-23 13:00:00 IST
வரப்பு ஓரங்களில் காட்டாமணக்கு, மல்பெரி செடிகள் பயிரிட்டால் மாவுப்பூச்சி தாக்குதல் குறையும்.
வெள்ளக்கோவில்:

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதி மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளக்கோவில் உதவி இயக்குநர் சர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முத்தூர், கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது. இவற்றில் மாவுப்பூச்சி தாக்குதல் இருந்து வருகிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி, கிழங்குகளின் தரம், எடை குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வரப்பு ஓரங்களில் காட்டாமணக்கு, மல்பெரி செடிகள் பயிரிட்டால் மாவுப்பூச்சி தாக்குதல் குறையும். வேப்ப எண்ணை ஒரு லிட்டர் நீருக்கு 25 மில்லி லிட்டர் அல்லது மீன் எண்ணை சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி 7 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

மேலும் மாவுப்பூச்சித்தாக்குதல் அதிகமாக இருந்தால் 3-வது வாரம் ரசாயன பூச்சிக்கொல்லியான தியோ மெத்தாக்சோம் ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் கலந்து இலைகள் நனையும்படி தெளிக்க வேண்டும். இவற்றைத் தெளிக்கும்போது 50 கிராம் காய்கறி நுண்ணூட்டம் சேர்க்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் வெர்டிசில்யம் கலந்து தெளிப்பதால் மாவுப்பூச்சியின் மீது நோயை உருவாக்கி அதனை இறக்க செய்யும் என தெரிவித்துள்ளார்.

Similar News