செய்திகள்
கோப்புப்படம்

13 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கலெக்டர் பாலசுப்பிரமணியம்

Published On 2021-06-21 17:35 GMT   |   Update On 2021-06-21 17:35 GMT
கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், இதுவரை 13 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் மூலமாக தினசரி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 4 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் நம் மாவட்ட மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.

கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை வரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்காக மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தாய்மார்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளது. மீண்டும் அதிகரிக்காமல் இருக்க மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.5.5 கோடி மதிப்பில் 1493 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் மேல்தளத்துடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் இருப்பு வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இக்கட்டிடத்தில் பாதுகாப்பு அம்சங்களான தீயணைப்பு கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு காவலர் அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முதல், இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளும் அறை, எந்திரங்கள் இருப்பு வைக்கும் அறை ஆகியவற்றின் அமைவிடம் குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாபு, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், கடலூர் தாசில்தார் பலராமன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News