செய்திகள்
விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள் - அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2021-06-19 18:11 IST   |   Update On 2021-06-19 18:11:00 IST
கடலூரில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 300 சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 1,165 உழவர் ஆர்வலர் குழுக்களும், 233 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உழவர் உற்பத்தியாளர் குழு ஒன்றுக்கு பண்ணை எந்திரங்கள் வாங்க தலா ரூ.5 லட்சம் தொகுப்பு நிதி, தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2020-21-ம் நிதி ஆண்டில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் கடலூர் வட்டாரத்தில் உள்ள 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள் வாங்குவதற்கு தொகுப்பு நிதியாக, ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கடலூர் வட்டாரத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 நெல் நடவு எந்திரங்கள், ஒரு வைக்கோல் கட்டும் எந்திரம், 4 பவர் டில்லர்கள், 11 ரொட்டவேட்டர்களும் வழங்கினார். இதில் கடலூர் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா, வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News