செய்திகள்
சாலை பணிக்காக தோண்டப்படும் மணலை விற்க எதிர்ப்பு - லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
சாலை பணிக்காக தோண்டப்படும் மணலை விற்க எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி:
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தீர்த்தாம்பாளையம் பகுதியில் இருந்து கடலூர் வரையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் சாலையின் இருபுறங்களிலும், பள்ளம் தோண்டி ஜல்லிகற்கள் கொட்டப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளம் தோண்டப்படும் போது கிடைக்கும் மணலை, ஒப்பந்ததாரர்கள் லாரிகளில் ஏற்றி தனிநபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பு.முட்லூர்ஊராட்சி மன்ற தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஜெயசீலன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி தமிழ்வாணன், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ், ஓட்டுனர் சங்க தலைவர் பாலகுரு மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்து மணலை ஏற்றி சென்ற லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் சாலை அகலப்படுத்தும் பணிக்காக எடுக்கும் மணலை முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி , சுகாதார வளாகம், மருத்துவமனை வளாகம் மற்றும் தாழ்வாக உள்ள பொது இடத்தில் கொட்டப்பட வேண்டும், தனிநபர்களுக்கு விற்பனை செய்ய கூடாது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.