செய்திகள்
சிதம்பரம் அருகே விவசாயி அடித்துக் கொலை
சிதம்பரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள கொளக்குடி செட்டித் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 60), விவசாயி. மனைவியை பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மருதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது ஜெயசந்திரனின் தலை, முகம் பகுதி சிதைந்த நிலையில் படுகாயங்கள் இருந்தன.
மேலும் அங்கிருந்த கட்டில், சுவர் என்று அனைத்து பகுதியிலும் ரத்தக்கறைகள் படிந்து இருந்தன. இதன் மூலம் மர்ம மனிதர்கள் இரவோடு இரவாக அவரை இரும்பு ஆயுதத்தால் அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.
மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஸ்கூப்பர் வரவழைக்கப்பட்டது. அதுசம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
பின்னர் ஜெயசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெயச்சந்திரன், 35 வயது பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். இதன் காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.