செய்திகள்
பெற்றோரை இழந்த குழந்தையிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் ஸ்டாலின்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட்- செயல்முறை என்ன?

Published On 2021-06-16 09:28 GMT   |   Update On 2021-06-17 07:52 GMT
அரசு ஊழியர், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் குழந்தைகள், அரசாங்கம் வழங்கும் இந்த சிறப்பு நிதி மற்றும் கல்வி செலவு சலுகையை பெற முடியாது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நலன் கருதி, அவர்களின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். 

இந்த திட்டத்தின்கீழ், தகுதிவாய்ந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக செலுத்தப்படும். குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடையும் போது வட்டியுடன் அந்த தொகை வழங்கப்படும். இடையில் எடுக்கமுடியாது. இதுதவிர பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை கலெக்டர்கள் தயார் செய்து வருகின்றனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியாக குழு செயல்படுகிறது. அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம், பெற்றோரின் இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மூலம், குடும்பத்தினரிடமும் நேரடியாக விசாரணை நடத்தப்படும். பொதுமக்களும் அந்தந்த பகுதி வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் கலெக்டர்களிடம் விண்ணப்பிக்கலாம்.



கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர் மருத்துவமனையில் இறந்தால், குழந்தைகளுக்கு வைப்பு நிதி மற்றும் கல்வி உதவி பெறுவது தொடர்பான நடைமுறைகளில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், வீடுகளில் இறந்தால், குழந்தைகளின் பாதுகாவலரோ அல்லது தாய் தந்தை இருவரில் ஒருவர், தங்களிடம் உள்ள மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

தாய், தந்தையை இழந்த குழந்தைகளைப் பொருத்தவரை, குடும்ப ஆண்டு வருமானம் கணக்கில் கொள்ளப்படாமல் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி மற்றும் கல்விச்செலவை அரசு ஏற்கும். 

தாய், தந்தை இருவரில் ஒருவர் மட்டும் இறந்திருந்தால், அந்த நபர் வருமானம் ஈட்டியவராக இருந்தால், முதலில் அவர் பெயர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் இருக்கிறதா? என ஆராயப்படும். பட்டியலில் பெயர் இல்லாதிருந்தால் வறுமை கோட்டு பட்டிலில் இடம்பெற தகுதி உள்ளதா என ஆராய்ந்து, பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தாய், தந்தை அரசு ஊழியராகவோ, பொதுத்துறை நிறுவன பணியாளராகவோ இருப்பின், அந்த குழந்தை, அரசாங்கம் வழங்கும் இந்த சிறப்பு நிதி மறும் கல்வி செலவு சலுகையை பெற முடியாது. 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்திருந்தால், அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம்.  தனியார் பள்ளியில் படித்தால், கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பிஎம் கேர்ஸ் அல்லது மாநில அரசு நிதியில் இருந்து கல்விக் கட்டணம் அளிக்கப்படும்.

அந்த குழந்தைகள் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வரையிலான செலவை அரசே அளிக்கும். அத்துடன், இந்த திட்டத்தின்கீழ், குழந்தையை பராமரிக்கும் உறவினர் அல்லது பாதுகாவலருக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.
Tags:    

Similar News