செய்திகள்
காரைக்குடி அருகே விபத்து- கார் மோதி போலீஸ்காரர் பலி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ராஜா (வயது 32).
இன்று காலை இவர் குன்றக்குடியில் உள்ள வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். ஆவுடைபொய்கை என்ற இடத்தில் திருச்சி - ராமேசுவரம் பைபாஸ் ரோட்டை ராஜா கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த போலீஸ்காரர் ராஜாவுக்கு திருமணமாகி பிரியதர்சினி என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது.