செய்திகள்
கோப்புபடம்

ஏமன் நாட்டுக்கு சென்று சென்னை திரும்பிய 2 பேர் விமான நிலையத்தில் கைது

Published On 2021-06-07 12:01 IST   |   Update On 2021-06-07 12:01:00 IST
இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது.இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சார்ஜா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆலந்தூர்:

சார்ஜாவிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர்அரேபியா சிறப்பு ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவில் வந்தது.

அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் முகமது(55), மதுரையை சேர்ந்த சுடர்மணி(33) ஆகிய இருவரின் பாஸ்போர்ட்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது.இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சார்ஜா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அதன்பின்பு அங்கிருந்து சட்டவிரோதமாக, இந்திய அரசின் அனுமதியின்றி,தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின்பு தற்போது மீண்டும் சார்ஜா வழியாக சென்னை திரும்பியுள்ளனர் என்பதை ஆவணங்கள் மூலம் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து இருவரையும் குடியுறிமை அலுவலகத்தில் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களுக்கு ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது தெரியாது.நாங்கள் வேலை செய்த நிறுவனம் தான்,எங்களை சில மாதங்கள் ஏமனில் வேலை செய்யும்படி அனுப்பி வைத்தனர் என்று கூறினர்.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் இருவரையும் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு, அரசு அனுமதியின்றி சென்று வந்ததாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.

அதுபோல் துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது தஞ்சாவூரை சேர்ந்த பஷீர்அலி(40) என்ற பயணியின் ஆவணங்களை சோதனை செய்யும்போது அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.

விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் சிவகுமார் என்றும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய்க்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. உண்மையான பாஸ்போர்ட் மூலம் இந்தியா திரும்ப முடியாது என்பதால்,ஏஜெண்ட்களிடம் பணம் கொடுத்து பஷீர்அலி என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் வாங்கி அதில் சென்னை வந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் சிவகுமாரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News