செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-06-06 07:41 IST   |   Update On 2021-06-06 07:41:00 IST
வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விஜி, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.
வடலூர்:

வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அமலா, பூவராகவன், செந்தில், பாலமுருகன், ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார், அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு சுமார் 500 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வடலூர் கலைஞர் நகர் டேனியல் மகன் இமானுவேல், அவரது மனைவி விஜி(40) மற்றும் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் (31) ஆகியோர் குடோனில் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விஜி, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 500 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் தலைமறைவான இமானுவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News