செய்திகள்
இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு

தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Published On 2021-06-05 20:07 GMT   |   Update On 2021-06-05 20:07 GMT
அ.தி.மு.க. கொறடா யார் என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
சென்னை:

அ.தி.மு.க. தொண்டர்களுடன் சசிகலா பேசியதாக வெளிவரும் ஆடியோ பதிவுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி-பழனிசாமி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், மாவட்டச்செயலாளர் பாலகங்கா ஆகியோரும் சென்றனர்.

இந்த ஆலோசனையில் சசிகலா பேசியதாக வெளிவரும் ஆடியோ பதிவுகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி-பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக யாரை நியமிக்கலாம் அ.தி.மு.க. கொறடாவாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றியும் இருவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்? தேர்தலுக்கு பிந்தைய தொண்டர் சந்திப்புகளை எப்போது நடத்தலாம்? என்பது குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.



அ.தி.மு.க. கொறடா யார் என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று
எடப்பாடி-பழனிசாமி
நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் ஓ-பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பில் உடன்பாடு ஏற்பட்டு, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக, அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ-பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.பாலமுருகன் சமீபத்தில் மரணமடைந்ததையொட்டி, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி-பழனிசாமி நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News