செய்திகள்
பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்களை முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்
பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழ்நாடு பெட்ரோலியம் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடித்தால் தமிழகத்தில் 25 சதவீத வினியோகஸ்தர்கள் நிதி மற்றும் கடன்சுமையால் பெட்ரோல் பங்க்குகளை நடத்த முடியாமல் மூடும் நிலை ஏற்படும். இந்த கொரோனா தொற்றால் 40 வினியோகஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர். திடீரென அவர்கள் இறந்து போனதால் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் அந்த பெட்ரோல் பங்க்குகளை நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
ஏனெனில் கடனுக்காக மொத்தமாக பெட்ரோல், டீசல் போட்டவர்கள் கொரோனா காலத்தில் பணத்தை கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வினியோகஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்களும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். ஆகவே பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்து, சலுகைகள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும்.
கடந்த 2011-ம் ஆண்டு வரை 45 ஆயிரத்து 104 பெட்ரோல் பங்குகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்தது. தற்போது 68,000 பெட்ரோல் பங்க்குகள் உள்ளது. இதனால் விற்பனை, இலக்கு குறைந்துள்ளது. குறிப்பாக மாதத்திற்கு 170 கிலோ லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட வேண்டும்.ஆனால் பெட்ரோல் பங்க்குகள் அதிகரித்ததால் சராசரியாக 155 கிலோ லிட்டர் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்த கொரோனா காலத்தில் 100 முதல் 120 கிலோ லிட்டர் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய வினியோகஸ்தர்களுக்கு பெட்ரோலுக்கு ரூ.2.80-ம், டீசலுக்கு ரூ.1.80-ம் கமிஷனாக வழங்கி வருகிறது. ஆனால் இந்த கமிஷன் தொகை 2017-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக போடப்பட்ட அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றவில்லை. இந்த கமிஷன் தொகையை வைத்து பெட்ரோல் பங்க்குகளை நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். குறிப்பாக கிராமப்புறங்களில் 25 சதவீத பெட்ரோல் பங்க்குகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே எண்ணெய் நிறுவனங்கள் வினியோகஸ்தர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அப்போதுதான் ஊழியர்களுக்கு சம்பளம், பெட்ரோல் பங்க்குகள் பராமரிப்பு போன்றவற்றை செய்ய முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.