செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2021-06-05 21:15 IST   |   Update On 2021-06-05 21:15:00 IST
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
கடலூர்:

கடலூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 350 படுக்கைகள் உள்ளன. இதில் 168 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையவை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, கடலூர் அரசு ஆஸ்பத்த+ிரியில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் (அதாவது 6 ஆயிரம் லிட்டர்) ஆக்சிஜன் சேமித்து வைக்கும் வகையில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த தொட்டியில் தினசரி ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது.

இதனால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நகாய் நிதி உதவியுடன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கி, நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் சேமிப்பு தொட்டியில், நிரப்பப்படும் ஆக்சிஜன், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இருப்பினும் தினசரி ஆக்சிஜன் வந்தால் மட்டுமே, தடையின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதனால் ஆக்சிஜன் கொண்டு வரும் லாரியை எதிர்பார்த்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதனால் தான் அரசு ஆஸ்பத்திரியிலேயே, ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த பணி இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைந்து விடும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இது பயன்பாட்டுக்கு வந்ததும், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்படுவதுடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வழங்க முடியும் என்றார்.

Similar News