செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2021-06-05 15:01 GMT   |   Update On 2021-06-05 15:38 GMT
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறி உள்ளார்.
சென்னை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன. 

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.


தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். 



இதையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பிளஸ்2 பொதுத்தேர்வை நடத்த திமுக, காங்கிரஸ், விசிக, மமக, மதிமுக, கொ.ம.தே.க, தமிழக வாழ்வுரிமை கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என அதிமுக கூறியது. இந்த கருத்துக் கேட்பு தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் அமைச்சர் வழங்கினார்.

இந்த அறிக்கையை ஆராய்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். 

‘மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும், அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும்’ என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News