செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள்

முழு ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-03 17:21 IST   |   Update On 2021-06-03 17:21:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கினையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 5 ஆயிரம் வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வில்லா முழுஊரடங்கு வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே சுற்றிதிரியும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் நகரில் முக்கிய சந்திப்புகளான பூக்கடைச்சத்திரம், மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா தலைமையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

அப்போது தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் நேற்று வரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்ததாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரத்து 850 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News