செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களையும் காணலாம்

மினி வேனில் கடத்திய 660 மதுபாட்டில்கள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2021-06-02 15:30 IST   |   Update On 2021-06-02 15:30:00 IST
களம்பூர் அருகே மினிவேனில் கடத்திச்சென்ற 660 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த், போளுர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் ஆகியோர் மேற்பார்வையில், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ்பாண்டியன் தலைமையில் களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷாகீன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று காலை ஆரணி - போளூர் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 660 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக இருந்தது.

அதைத்தொடர்ந்து மது பாட்டில்களுடன் மினி வேனை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை கடத்தி வந்ததாக முக்குறும்பை மேல்காலனி பகுதியை சேர்ந்த மினிவேன் டிரைவர் திலீப்குமார், கர்நாடக மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த முருகன், பார்த்திபன், முக்குறும்பை கீழ் காலனி பகுதியை சேர்ந்த மகேந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஊரடங்கு காலத்தில் போலீசார் கடந்த மே மாதம் 10-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 503 லிட்டர் சாராயம், 65 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 19 சாராய வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News