செய்திகள்
கண்ணமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு தடுப்புகள் வைத்து தடை செய்யப்பட்டதை காணலாம்

கண்ணமங்கலம் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா

Published On 2021-06-01 16:52 IST   |   Update On 2021-06-01 16:52:00 IST
கண்ணமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் குறுக்குத் தெரு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பிள்ளையார் கோவில் தெரு, குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 15 வார்டுகளிலும் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் பணி கடந்த 6மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வேட்டவலம் செயல் அலுவலர் சுகந்தி, பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

கண்ணமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பேரூராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு பொதுமக்களை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

போளூர் பேரூராட்சியில் 4 பேருக்கும், சுற்றியுள்ள கிராமங்களில் 11 பேருக்கும் என 15 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.

இவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் அனுப்பி வைத்தார்.

செங்கம் மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 21 நபர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் செங்கம் மருத்துவ வட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலம் 406 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும் எனவும், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டுமென சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News