செய்திகள்
விளை நிலங்களில் முலாம் பழம் அழுகிய நிலையில் கிடப்பதை காணலாம்.

முழு ஊரடங்கால் முலாம் பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

Published On 2021-05-31 15:49 IST   |   Update On 2021-05-31 15:49:00 IST
முழு ஊரடங்கால் முலாம் பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் விளை நிலங்களிலேயே அழுகிய நிலையில் கிடக்கிறது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாலும் விவசாயம் நிறைந்த மாவட்டமாகும். இங்கு கோடை காலத்தில் பெரும்பாலும் அதிகளவில் முலாம் பழம் பயிரிடப்படும். அதுவும் திருவண்ணாமலை அருகில் உள்ள வாணாபுரம், தானிப்பாடி, சதாகுப்பம், இளையங்கண்ணி, அகரம்பள்ளிப்பட்டு, சின்னியம்பேட்டை, வேப்பூர், டி.வேலூர், ரெட்டியார்பாளையம், மலையனூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களில் பெரும்பாலும் முலாம்பழம் பயிரிட்டு வருகின்றது.

இந்த பழம் ஜூஸாகவும், பழமாகவும் விற்பனை செய்வார்கள். இது பயிரிட ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவாகும் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. முலாம்பழம் பயிரிட்டால் மூன்று மடங்கு லாபம் தரும் என்றும் கூறப்படுகிறது.

விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு வழக்கம் போல் முலாம் பழம் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தொற்றின் 2-ம் அலையால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தற்போது உள்ள ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் விவசாய நிலங்களில் பல ஏக்கரில் முலாம்பழம் பயிரிட்டு அறுவடை செய்யும் நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் விளை நிலங்களிலேயே முலாம் பழம் அழுகிய நிலையில் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News