செய்திகள்
பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் - ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆணையர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
செய்யாறு:
முன்னதாக செய்யாறு சுற்றுலா மாளிகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், சமுதாய கருத்தாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருப்பவர்களை கண்டறிந்து சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய் தாக்கத்தினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விதிகளுக்கு உட்பட்டு வேலை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 400 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, மருந்துகள், உணவு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரத்த அணு பரிசோதனை என்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகளை பார்வையிட்டார். அசனமாப்பேட்டையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமையும் அவர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, செய்யாறு வருவாய் கோட்ட அலுவலர் என்.விஜயராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா உடனிருந்தனர்.
தொடர்ந்து பாப்பந்தாங்கல் ஊராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா முதலுதவி பெட்டியினை வழங்கினார்.