செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

Published On 2021-05-26 10:57 IST   |   Update On 2021-05-26 13:46:00 IST
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். 

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.  கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன. 



18 முதல் 45 வயதினருக்கு செலுத்த 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 1.64 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. 

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிறகு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். 

தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News