செய்திகள்
பசுமைக்குடில் தோட்டத்தில் ரோஜா மலர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை படத்தில் காணலாம்

கொரோனா ஊரடங்கால் ஓசூர் ரோஜா மலர் சாகுபடி- விவசாயிகள் கடும் பாதிப்பு

Published On 2021-05-19 14:16 IST   |   Update On 2021-05-19 14:16:00 IST
தமிழகத்தில் அதிக அளவில் கொய் மலர் உற்பத்தி செய்து வரும் ஓசூரில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமைக்குடில் அமைத்து மலர் சாகுபடி செய்யப்படுகிறது.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, நல்ல மண்வளம் சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் இங்கு அதிக அளவில் ரோஜாமலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட் காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் ஆகிய விழா கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

உலக அளவில் கொரோனா பொது முடக்கம், விமான சேவை பாதிப்பு ஆகியவற்றினால் ரோஜா கொய் மலர் ஏற்றுமதியில் இந்தியா கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மலர் உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிக அளவில் கொய் மலர் உற்பத்தி செய்து வரும் ஓசூரில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமைக்குடில் அமைத்து மலர் சாகுபடி செய்யப்படுகிறது.

ஓசூர் கொய்மலர் விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக லாபகரமாக தொழில் செய்து வந்தனர். விவசாயிகள் பூக்களைத் தக்க நேரத்தில் கொய்து, அதனை குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு வாரம் பதப்படுத்தி வைத்து, பின்னர் முறையாக பேக்கிங் செய்து குளிரூட்டப்பட்ட லாரிகளில் பெங்களூரு விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றையொட்டி, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் விமான சேவை நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏற்றுமதி செய்து வந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் முற்றிலுமாக மலர் ஏற்றுமதி நடைபெறவில்லை. விமான சேவை மூலமான ஏற்றுமதியை முழுமையாக நம்பி சாகுபடி செய்து வந்த இந்திய கொய் மலர் விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது கொரோனா பெரும் தொற்று.

இதுகுறித்து, ஓசூர் பகுதி ரோஜா மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:

கொரோனா முதல் அலையின்போது, அறுவடை செய்து ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த மலர்கள், செடியில் அறுவடைக்கு இருந்த மலர்கள் உள்பட அனைத்தும் வீணாகின. பல மாதங்களாக உழைத்து பணமாக மாற்றும் நேரத்தில் கொரோனா பொதுமுடக்கம் விவசாயிகளை நிலை குலைய வைத்தது. அதன் பிறகு கொரோனா முதல் அலை குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்து வந்தனர். இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வந்துவிடலாம் என்று நினைத்து மீண்டும் ரோஜா கொய் மலர்களை வளர்த்து வந்தனர்.

இந்த நேரத்தில் கொரோனா தொற்றின் 2-ம் அலை கொய் மலர் தொழிலை மீண்டும் முடக்கியது. மலர் விவசாயத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவாகிறது ஏற்றுமதி தடைபட்டது மட்டுமல்லாமல், திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள், கோவில் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை என தமிழக அரசு ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியுள்ளது.

திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களை நம்பி உள்ள மலர் உற்பத்தி விவசாயிகள் முதல் அலங்கார வளைவு போன்ற வேலைப்பாடு செய்யும் தொழிலாளி, மலர் கொத்து தயாரிக்கும் சிறு வியாபாரிகள் வரை தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர், மேலும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Similar News