அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வேலூர் ஜெயில் கைதி பலி
வேலூர்:
வேலூர் ஜெயிலில் விசாரணை, தண்டனை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு கடந்த 2015-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ரங்கன் (வயது60) என்பவர் போக்சோ வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று கைதியாக அடைக்கப்பட்டார்.
ரங்கன் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவருக்கு சர்க்கரை வியாதி, ரத்தகொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் காணப்பட்டுள்ளது. இதற்காக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் ரங்கன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 13-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து உடனடியாக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 2 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது.
மருத்துவமனையில் ரங்கனுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரங்கன் உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.