செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஆக்சிஜன் சிலிண்டரில் 2 நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளித்த போது எடுத்த படம்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஆக்சிஜன் சிலிண்டரில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

Published On 2021-05-15 07:54 IST   |   Update On 2021-05-15 07:54:00 IST
கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:

கடலூரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு நாளொன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் மூச்சுத்திணறல் போன்ற அதிகம் பாதிக்கப்படும் நபர்கள் ஆக்சிஜன் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இருப்பினும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இதனால் ஆஸ்பத்திரி அதிகாரிகள் மாற்று ஏற்பாடாக ஒரே சிலிண்டரில் இணை கருவி பொருத்தி 2 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

இதேபோல் 4 சிலிண்டரில் இணை கருவிகள் பொருத்தி ஒரே நேரத்தில் 8 நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 60 ஆக்சிஜன் படுக்கை வசதியையும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Similar News