செய்திகள்
கோப்புப்படம்

டாஸ்மாக் கடையில் ரூ.73 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை

Published On 2021-05-13 19:14 GMT   |   Update On 2021-05-13 19:14 GMT
காவலாளிகளை கட்டிப்போட்டு விட்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 10-ந்தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளன. அதன்படி பாலக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையும் பூட்டப்பட்டு இருந்தது.

கீழையூர் மேல ஈசனூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(59), முப்பத்தி கோட்டகம் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்த அந்தோணி (45) ஆகிய இருவரும் இரவு காவல் பணியாளராக இங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள சிறிய கீற்று கொட்டகையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அந்த மதுபான கடைக்கு 5 பேருக்கு மேல் வந்துள்ளனர். அவர்களில் சிலர் மதுக்கடையில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த இருவரின் வாய், கைகள் மற்றும் கால்களை கட்டி விட்டு கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர்.

மேலும் டாஸ்மாக் கடையின் ஷட்டரில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.73 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். மர்ம நபர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இரவு காவலர்கள் இருவரும் தங்களுக்குள்ளாகவே கட்டப்பட்டு இருந்த கட்டை அவிழ்த்து விட்டு பின்னர் நடந்த சம்பவத்தை டாஸ்மாக் கடை மேலாளருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் கொள்ளை நடந்த மதுக்கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் 3 தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News