செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Published On 2021-05-12 15:45 GMT   |   Update On 2021-05-12 15:45 GMT
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் படிப்படியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அத்தியாவசிய பணிக்கு செல்லும் வாகனங்களை தவிர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பு பகுதி வழியாக காய்கறி, மளிகை கடைகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சென்று வருவதுண்டு. இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கொரோனா தொற்றின் அபாயத்தை உணராமல் அலட்சிய போக்குடன் முககவசம் அணியாமல் பயணித்தனர்.

அங்கு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முககவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரை மடக்கி பிடித்து ரூ.200 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News