செய்திகள்
வாங்கிய மதுபாட்டில்களை அட்டை பெட்டியில் கொண்டு செல்லும் காட்சி.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.7¾ கோடிக்கு மது விற்பனை

Published On 2021-05-10 15:20 GMT   |   Update On 2021-05-10 15:20 GMT
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7¾ கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினமும், நேற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது. இந்த தளர்வு காரணமாக மளிகை, இறைச்சி கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் 6 மணி வரை திறந்திருந்தன.

2 வாரம் முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். இதனால் நாகை, புதிய பஸ் நிலையம், நல்லியான் தோட்டம், முதலாவது கடற்கரை சாலை, ரெயில் நிலையம், செல்லூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

சில கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் 100 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.7 கோடியே 87 லட்சத்து 2 ஆயிரத்து 510-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். மதுப்பிரியர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தினால், சில கடைகளில் மதியத்துக்குள் மதுபாட்டில்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

மதுபாட்டில்கள் விற்று தீர்ந்ததால் விற்பனையாளர்கள், டாஸ்மாக் கடைகளின் ‌‌ஷட்டர்களை பாதி அளவு மூடி விட்டு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மதுப்பிரியர்கள் முன்கூட்டியே கடையை ஏன் மூடினீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும்பாலான கடைகளில் மதுபாட்டில்கள் தீர்ந்ததால் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கடைசி நாளன்று ஆர்வமுடன் வந்த மதுப்பிரியர்கள் மதுபாட்டில்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முழு ஊரடங்கு காரணமாக கடந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அனல் பறந்தது.
Tags:    

Similar News