செய்திகள்
கோப்பு படம்.

போளூர் டாக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.60 ஆயிரம் திருட்டு

Published On 2021-05-09 17:45 IST   |   Update On 2021-05-09 17:45:00 IST
போளூரில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போளூர்:

போளூர் டைவர்ஷன் ரோட்டில் வசித்து வருபவர் டாக்டர் சிவநேசன் (வயது 77). இவர், அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனது வீட்டில் ஒரு பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். நேற்று முன்தினம் காலை டாக்டர் வீட்டில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை வேலைக்காரர் அணைக்க வந்தார். அப்போது வீட்டின் மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி உடனே டாக்டருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து டாக்டர் சிவநேசன் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.60 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து டாக்டர் போளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றார். திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News