3 ஊழியர்களுக்கு கொரோனா- குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் வாரியம் மூடல்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வெலிங்கடன் கன்டோன்மெண்ட் வாரியம் உள்ளது. இங்கு மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்கள் குடியிருப்புக்கான வரி, பிறப்பு, இறப்புச் சான்று பெறுவதற்காக அங்கு அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் 3 ஊழியர்கள் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததது.
இதையடுத்து அங்கு பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கன்டோன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடப்பட்டது. மேலும் அவர்களுடன் பணிபுரிந்த, தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களை தனிமையில் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.