செய்திகள்
கோப்புபடம்

முழு ஊரடங்கில் அதிக கூட்டம் - ஊட்டியில் திருமண மண்டபத்துக்கு அபராதம்

Published On 2021-04-26 08:43 GMT   |   Update On 2021-04-26 08:43 GMT
தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஊட்டி:

இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் திருமணம், இதனை சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இறப்பு சார்ந்த நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருமணங்கள் நடந்தன. முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பல இடங்களில் மிக மிக எளிமையாக நடந்தன.

ஆனால் ஊட்டி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏராளமானோர் வந்திருந்தனர். அதிலும் முகக்கவசம், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவில்லை. உடல் வெப்ப நிலை பரிசோதனை தகவல் பதிவு செய்யாதது போன்ற குறைபாடுகள் இருந்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தை ஆய்வு செய்து அதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அனைத்து திருமண மண்டபங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News