செய்திகள்
வந்தவாசி பகுதியில் கிருமி நாசினி தெளித்தபோது எடுத்த படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி மேலாளர் உள்பட 201 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

Published On 2021-04-23 17:44 GMT   |   Update On 2021-04-23 17:44 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக வங்கி மேலாளர் உள்பட 201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் போலீசார் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணில் இருந்து தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதாவது நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 201 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 576 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 20 ஆயிரத்து 236 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1048 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 292 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வந்தவாசியில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் உஷாராணி உத்தரவின்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் அவர்கள் வசிக்கும் தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது.

மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டன.

கண்ணமங்கலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர், கணக்காளர், பெண் உதவியாளர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் நேற்று மாலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதன் காரணமாக பிற்பகலில் வங்கியில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை.

முன்னதாக வங்கியில் பணிபுரியும் ஆண் பணியாளருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் அவரது மனைவிக்கும் தொற்று கண்டறிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News