செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை

Published On 2021-04-12 13:23 GMT   |   Update On 2021-04-12 13:23 GMT
காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் கொரோனா பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட சேக்குப்பேட்டை தெற்குதெரு, பாண்டவ பெருமாள் கோவில் தெரு, லிங்கப்பன் தெரு, உள்ளிட்ட தெருக்களில் இரும்பு தகடுகள் வைத்து அடைக்கப்பட்டு வருகி்றது. அங்கு உள்ள நோயாளிகளின் உடல் நிலையை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அடைக்கப்பட்ட தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் பேரில் காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் கொரோனா பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஸ்ரீபெரும்புதூர் சவீதா மருத்துவ கல்லூரி, குன்றத்தூர் மாதா மருத்துவமனை கல்லூரி, மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என 4 தனியார் மருத்துவ கல்லூரி மையங்களும், பல்லவன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரகடம் பகுதியில் அரசு தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதி என 6 மையங்களில் 1,780 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பெருநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அனைத்து அலுவலரும் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News