செய்திகள்
செய்யாறில் நேற்று திடீரென பெய்த மழையால் நனைந்த நெல் மூட்டைகள்.

செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து நாசம்

Published On 2021-04-12 13:08 GMT   |   Update On 2021-04-12 13:08 GMT
திடீரென மழை பெய்ததால் செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகியது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாரத்தில் வாக்கடை, வடதண்டலம், செய்யாறு கஸ்பா, அனக்காவூர், தேத்துறை உள்ளிட்ட 5 குறு வட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தனியார் மண்டிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

கடந்த 5 நாட்களுக்கு முன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகள் குடோனில் இடமில்லாததால் திறந்த வெளியில் களத்தில் இறக்கி வைத்துள்ளனர். ஒழுங்கு முறை விற்பனை கூட நிர்வாகத்தினர் கடந்த 2 நாட்களாக திறந்த வெளியில் உள்ள நெல் மூட்டைகளை எடைபோடாமல், குடோனில் இருந்த நெல் மூட்டைகளை மட்டுமே எடைபோட்டதாக கூறப்படுகிறது.

அவ்வாறு எடைபோட்டு முடித்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் வெளியில் எடுத்துச் செல்லாமல், குடோனிலேயே வைத்துள்ளதால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகளை வெளியில் இறக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று திடீரெனப் பெய்த மழையால் வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து நாசமாகியது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததைப் பார்த்த விவசாயிகள் வேதனையடைந்தனர்.

செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் நாள் ஒன்றுக்கு 4,000 முதல் 5,000 மூட்டை வரை நெல் கொள்முதல் செய்கின்றனர். செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 500 டன் கொள்ளளவில் 5 குடோன்களும், 1000 டன் கொள்ளளவில் ஒரு குடோனும் உள்ளன. அதில் மூட்டைகள் நிறைந்துள்ள நிலையில் திறந்த வெளியில் உள்ள உலர் களத்தில் 6 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்காக தேங்கி உள்ளன. நேற்று சிறிது நேரம் பெய்த திடீர் மழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்தது.

எனவே இனிவரும் நாட்களில் ஒழுங்கு முறை விற்பனை கூட நிர்வாகத்தினர் குடோனில் இருக்கும் வியாபாரிகள் வாங்கிய நெல் மூட்டைகளை உடனடியாக வெளியில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தி, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை குடோனில் இறக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News