செய்திகள்
கோப்புப்படம்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2021-04-10 18:51 GMT   |   Update On 2021-04-10 18:51 GMT
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். அதன்பிறகு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனா்.

அந்த பாா்சல்களை வெளியே எடுத்து பிரித்து பாா்த்தனா். அதில் தங்க கட்டிகள் இருந்தது. 2 பாா்சல்களிலும் இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யாா்? என விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News