செய்திகள்
தபால் ஓட்டு

ஆலந்தூர் தொகுதியில் தபால் ஓட்டு போட முடியாமல் 200 போலீசார்-தீயணைப்பு வீரர்கள் தவிப்பு

Published On 2021-04-10 10:20 GMT   |   Update On 2021-04-10 10:20 GMT
தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமி‌ஷனரும் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார், தீயணைப்பு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலந்தூர்:

சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது.

வெளியூரில் இருந்து வந்து தேர்தல் பணிபுரிந்த ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போடுபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஆலந்தூர் தொகுதியில் ஆயுதப்படை போலீசார், தனிப்படை போலீசார், தீயணைப்பு படையினர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் தினத்தில் பணியாற்றினார்கள்.

இவர்கள் தபால் வாக்கு போடுவதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆலந்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தனர்.

இதில், 200-க்கும் அதிகமான மனுக்கள் ஏற்கப்படவில்லை. இதுகுறித்து முறையான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தபால் வாக்கு போட முடியாமல் தவித்து வருகிறார்கள். தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமி‌ஷனரும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்களையும் தெரிவித்தால் எந்த தொகுதியில் ஓட்டு இருக்கிறது என்பது தெரியும். இதன் மூலம் தபால் வாக்குகளை போடலாம்.

மே மாதம் 2-ந் தேதி தான் வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே, மே 1-ந் தேதி வரை தபால் வாக்குகளை போட முடியும். எனவே இவர்கள் தபால் வாக்கு அளிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News