செய்திகள்
கேமரா பொருத்தும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

Published On 2021-04-05 02:23 GMT   |   Update On 2021-04-05 02:23 GMT
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில், 1509 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நட க்கிறது. இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேர்தலில் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க ஏதுவாக 3001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி எவை என்று ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 28 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும், 183 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டது. இந்த இடங்களில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர ஆயுதப்படை போலீசாரும், சில இடங்களில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகள், பிரச்சினை ஏற்படும் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1509 வாக்குச்சவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவட்டத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News