இளைஞர்களுக்கு வேலை வழங்காவிட்டால் நடுரோட்டில் நிற்க வைத்து அடியுங்கள் - முன்னாள் எம்.பி. கண்ணன் ஆவேசம்
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் சமீபத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவர் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆட்சியையும், அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தார். பிரதமர் அலுவலகத்தில் அதிகார உச்சத்தில் சிங்கம் போல் இருந்தார்.
புதுவை வளர்ச்சிக்கு அவர் ஏன் எதுவும் செய்யவில்லை? நாராயணசாமியும், மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் புதுவைக்கு எதுவும் செய்யவில்லை.
ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த போது, வீரேந்திர கட்டாரியா என்ற கவர்னர் மூலம் ரங்கசாமிக்கு நாராயணசாமி தொல்லை கொடுத்தார்.
புதுவையில் 2.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போகின்ற திட்டத்தை பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஓராண்டு காலக்கெடுவில் ஏராளமானோருக்கு வேலை கொடுப்போம். இல்லாவிட்டால், நடுரோட்டில் நிற்க வைத்து என்னை அடியுங்கள்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்போவதாக அறிவித்தனர். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. பித்தலாட்டமான ஏமாற்றும் விதத்தில் வாக்குறுதியை அளித்தனர்.
புதுவைக்கு பா.ஜ.க. வந்ததுமே காங்கிரசுக்கு பயம் வந்து தோல்வி பயத்தில் பா.ஜ.க.வை ரவுடி கட்சி என பச்சை பொய்யை சொல்கின்றனர். கார்பரேட் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை. காங்கிரஸ் கட்சியில் கார்ப்பரேட் இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். காங்கிரசுக்கு வாக்களிப்பது நமது தலையில் நாமே நெருப்பை போட்டுக் கொள்வது.
இவ்வாறு கண்ணன் கூறினார்.
மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், "மீனவர்களை மத்திய அரசு உடனடியாக இலங்கையில் இருந்து மீட்டுள்ளது. பா.ஜ.க. கலவரத்தை தூண்டுவதாக நாராயணசாமி பிரச்சினைகளை திசை திருப்புகிறார். அதுதான் காங்கிரசின் செயல்பாடு. அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று குறிப்பிட்டார்.