செய்திகள்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்- எஸ்.பி.சிவக்குமார் உறுதி
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று ராஜ்பவன் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தெரிவித்தார்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளருமான எஸ்.பி.சிவக்குமார் போட்டியிடுகிறார். நேற்று வாழைக்குளம், சின்னையாபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோகன் தலைமையில், வீரையன் முன்னிலையில் வாழைக்குளம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமாருடன் தொகுதி செயலாளர் ஸ்ரீதர், தொண்டரணி அமைப்பாளர் ஆனந்த், சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜோசப் கபிரியேல், துணை அமைப்பாளர் அகிலன், மகளிரணி அமைப்பாளர் வடிவுகரசி என்கிற ஜானகி, சாமிக்கண்ணு, அய்யப்பன், காங்கிரஸ் கட்சியின் தொகுதி தலைவர் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் சரவணன், செந்தில், விடுதலை சிறுத்தை கட்சியின் பத்தராசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அந்த பகுதி மக்கள், ‘சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும், குடியிருப்பு பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்ட எஸ்.பி.சிவக்குமார், நான் தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.