செய்திகள்
அரிசி

திருக்கடையூர் ஆக்கூர் பகுதியில் ரே‌‌ஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-03-24 19:38 IST   |   Update On 2021-03-24 19:38:00 IST
திருக்கடையூர் ஆக்கூர் பகுதியில் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் உள்ள அனைத்து ரே‌‌ஷன் கடைகளிலும் கடந்த சில மாதங்களாக நிறம் மாறிய மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய அரிசியே குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரே‌‌ஷன் கடை அரிசியை வாங்கி பயன்படுத்துபவர்கள் மிகவும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த விலையில்லா அரிசி வழங்கவில்லை என்றால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பலர் போதிய உணவு இன்றி சிரமம் அடையக் கூடிய நிலை ஏற்படும். காரணம் கடைகளில் விற்கப்படும் அரிசிகள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு 25 கிலோ அரிசி ரூ.1,000 மற்றும் அதற்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து கடைகளில் அரிசி வாங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக ரே‌‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் உள்ளது.

இதுகுறித்து திருக்கடையூர் பொதுமக்கள் கூறுகையில், திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதியில் உள்ள அனைத்து ரே‌‌ஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசி தரமற்றதாக உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சில கடைகளை தவிர மற்ற ரே‌‌ஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அரிசியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த அரிசியை சமைத்து உண்ண முடியாத நிலையில் ஏழை, எளிய குடும்பத்தினர் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரே‌‌ஷன் கடைகளில் ஆய்வு செய்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News