செய்திகள்
கஞ்சா (கோப்புப்படம்)

வேளாங்கண்ணி அருகே கடற்கரையில் 120 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2021-03-19 10:52 GMT   |   Update On 2021-03-19 10:52 GMT
வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் குழிதோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கடற்கரையில் மறைவான இடத்தில் சிலர் குழிதோண்டி கஞ்சா மூட்டைகள் புதைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் கீழ்வேளூர் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மண்வெட்டியால் தோண்டினர். அப்போது சில அடி ஆழத்தில் 3 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை வெளியே எடுத்து பிரித்து பார்த்ததில் 120 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து நாகை கடலோர காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கஞ்சா மூட்டைகளை புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல்காரர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News