செய்திகள்
சிவகங்கை அரண்மனை வாசலில் திறந்த ஜீப்பில் சிவகங்கை அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் பேசிய போது எடுத்த படம்.

சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2021-03-13 20:08 IST   |   Update On 2021-03-13 20:08:00 IST
சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை(தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதனும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாநில செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜூம், மானாமதுரை தனி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. நாகராஜனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர், இதையொட்டி மதுரையில் இருந்து வந்த 3 பேருக்கும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக்கட்சியான பா.ஜ.க.வினர் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட எல்லையான திருப்புவனத்தில் உள்ள சந்தை திடலில் 3 வேட்பாளர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பூவந்தி, திருமாஞ்சோலை, பில்லூர்விலக்கு, முத்துப்பட்டி, சிவகங்கை ரிங்ரோடு, ஆகிய இடங்களில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் 3 பேரும் திறந்த ஜீப்பில் சிவகங்கை ரிங் ரோட்டில் இருந்து சிவகங்கை சிவன் கோவில் வரை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுக ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் 3 வேட்பாளர்களும் சிவகங்கை சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக அரண்மனை வாசல் வரை தொண்டர்கள் அழைத்து சென்றனர்.

அரண்மனை வாசலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, மற்றும் எம்.ஜி.ஆர்.உருவப்படத்திற்கு வேட்பாளர்கள் மாலை அணிவித்தனர்.

பின்னர் 3 வேட்பாளர்களும் திறந்த ஜீபபில் ஏறி நின்று தொண்டர்கள் மத்தியி்ல் பேசினார்கள். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசியதாவது:-

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதியில் அ.தி.மு.க.வும் ஒரு தொகுதியில் நமது கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் போட்டியிடுகிறது.

கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட 3 வேட்பாளர்களுக்கும் கொளுத்தும் வெயிலில் நீங்கள் அளித்த வரவேற்பில் இருந்து நமது வெற்றி உறுதி என தெரிகிறது. நமது கூட்டணி வெற்றி கூட்டணி. 4 ெதாகுதிகளிலும் நாம் வெற்றி பெறுேவாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் செந்தில்நாதனுக்கு கொல்லங்குடி, மற்றும் காளையார் கோவில், மற்றும் புலியடிதம்மம் ஆகிய ஊர்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கம்புணரி ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதே போல் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மருதுஅழகுராஜூவிற்கு திருக்கோஷ்டியூர், திருப்பத்தூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் மானாமதுரை தொகுதி வேட்பாளர் நாகராஜனுக்கு மானாமதுரை, இளையான்குடி, மற்றும் சாலைகிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News