செய்திகள்
காரைக்குடி தாலுகா அலுவலகம் வழியாக வந்த வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்பிய போது எடுத்த படம்.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2021-03-13 18:51 IST   |   Update On 2021-03-13 18:51:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுபவர்களிடமிருந்து நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சிவகங்கை தொகுதிக்கு போட்டியிட விரும்புவோர் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காரைக்குடி தொகுதிக்கு போட்டியிட விரும்புபவர்கள் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காரைக்குடி தாலுகா அலுவலகத்திலும், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் திருப்பத்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்திலும், மானாமதுரை தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் மானாமதுரையில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் நாளான நேற்று 4 தொகுதிகளிலும் யாரும் விண்ணப்பிக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் பெற்று சென்றனர். அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள் மட்டும் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வருகின்ற 19-ந்தேதி கடைசி நாளாகும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும்பொழுது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் அளவிற்கு 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்யுமிடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

Similar News