செய்திகள்
பூசைதுரை

விற்பனை ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் இணை சார் பதிவாளர் கைது

Published On 2021-03-11 14:25 GMT   |   Update On 2021-03-11 14:25 GMT
விற்பனை ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் இணை சார்பதிவாளர் - உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ஞானசேகர் (வயது 42). விவசாயி. இவர் தனக்கு சொந்தமாக புருகீஸ்பேட்டையில் உள்ள வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கான விற்பனை ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய கடலூர் 2-வது இணை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் இணை சார் பதிவாளர் பூசைதுரை(45), உதவியாளர் செல்வத்தை (56)அணுகி, பத்திரத்தை பதிவு செய்ய கேட்டுக்கொண்டார். அதற்கு அவர்கள் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஞானசேகர், இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி, ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை பத்திர நகல்களுடன் வைத்து இணை பதிவாளர் பூசைதுரையிடம், ஞானசேகர் வழங்கினார்.

அதற்கு அவர் உதவியாளர் செல்வத்திடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஞானசேகர் லஞ்ச பணத்தை உதவியாளர் செல்வத்திடம் வழங்கினார். இதை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா, சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். கடலூர் இணை பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையால் அங்கிருந்த இடைத்தரகர்கள் அவசர, அவசரமாக வெளியேறினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News