செய்திகள்
விபத்து

சேத்தியாத்தோப்பு அருகே பஸ் மீது லாரி மோதல் - 4 பேர் காயம்

Published On 2021-03-10 23:44 IST   |   Update On 2021-03-10 23:44:00 IST
சேத்தியாத்தோப்பில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சேத்தியாத்தோப்பு:

மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே நங்குடி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது. இதில் பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அபய குரல் எழுப்பினர். உடன் அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பஸ் டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர் ( வயது 42), அதே ஊரை சேர்ந்த கண்டக்டர் புண்ணியமூர்த்தி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராஜமன்னார்குடியை சேர்ந்த அஜய் (26), பண்ருட்டி தேவநாதன் (34 ) ஆகியோர் காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்த 4 பேரும் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ் கிரைன் மூலம் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News