செய்திகள்
மின்கசிவால் மளிகை கடையில் தீ விபத்து- வியாபாரி பலி
மின்கசிவு காரணமாக மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே படுத்து இருந்த வியாபாரி, உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த நீலாங்கரை பாரதியார் நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசபாண்டியன் (வயது 28). தந்தையை இழந்த இவர், தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார்.
முருகேசபாண்டியன், அவரது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். வியாபாரம் முடிந்ததும் இரவில் மளிகை கடைக்குள் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு தூங்கிவிட்டார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அவரது மளிகை கடையில் தீப்பிடித்து எரிந்தது. கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி மளிகை கடையில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு படுத்து இருந்த முருகேச பாண்டியன் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான முருகேச பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் தடவியல் நிபுணர்களை கொண்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.