செய்திகள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

பள்ளி தேர்வுகள் குறித்து பெற்றோரின் கருத்து கேட்டு முடிவு- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

Published On 2021-03-04 04:45 GMT   |   Update On 2021-03-04 04:45 GMT
தேர்வுகள் தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:

கொரோனாவுக்கு பிறகு புதுவையில் பள்ளிகள் நேற்று முதல் முழுநேரமாக இயங்க தொடங்கின. இந்தநிலையில் கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்தார். நேற்று நீடராஜப்பையர் வீதியில் உள்ள சவரிராயலு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார்.

அப்போது கவர்னரை சந்தித்த ஊழியர்கள் தங்களது சம்பளம் மிக குறைவாக உள்ளது. கடந்த 4 மாதமாக சம்பளமே வழங்கவில்லை. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். அதன்பின் பள்ளி குழந்தைகள் நடத்திய பொம்மைகள் நாடகத்தை அவர் ரசித்துப் பார்த்தார்.

தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் பல மாதங்களுக்கு பிறகு மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அரை நாட்கள் பள்ளி இருந்தாலும் அவர்களுக்கு தேவையான சத்துணவு வழங்கப்பட வேண்டும். இப்போது காலையில் பால் வழங்குகிறோம்.

காலை உணவு மாற்றி வழங்கும் திட்டமும் உள்ளது. மாணவர்களின் எலும்பு, மூளை வளர்ச்சிக்கு பால் மிகவும் உதவும்.

முழுநேரமும் பள்ளிகள் இயங்குவது, தேர்வுகள் நடத்துவது தொடர்பாக இருவிதமான கருத்துகள் உள்ளன. சிலர் முழுநேர பள்ளி வேண்டாம் என்கின்றனர். புதுவையில் தொற்று குறைந்துள்ளது எனவே முழுநேர வகுப்பு தேவை என்று சிலர் கூறுகின்றனர்.

அதேபோல்தான் தேர்வு வி‌‌ஷயத்திலும் கருத்துகள் உள்ளன. கட்டாய தேர்வுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. தேர்வுகள் தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் லப்போர்த் வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு செயலாளர் சுந்தரசேன், ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News