செய்திகள்
தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க 100 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க 100 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட்டன.
தர்மபுரி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 6- ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு நேற்று திறக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கார்த்திகா மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கிடங்கை திறந்து வைத்தார். சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த கிடங்கில் இருந்து 100 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள உதவும் வி.வி.பேட் எந்திரம் ஆகியவை எடுக்கப்பட்டன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பென்னாகரம், அரூர் (தனி), பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 20 வீதம் வழங்கப்பட்டன. இவற்றை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்களிக்கும் முறை குறித்து வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க இவை பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீர் இக்பால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், அனைத்து தாசில்தார்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.