செய்திகள்
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

எந்த வேலையையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டால் சிறந்த இடத்துக்கு வரலாம்- கவர்னர் தமிழிசை பேச்சு

Published On 2021-02-27 10:34 GMT   |   Update On 2021-02-27 10:34 GMT
எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் நீங்களும் ஒரு சிறந்த இடத்துக்கு வர முடியும் என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
பாகூர்:

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் உள்ள ஆர்.கே.என். பீச் ரிசார்ட்டில், புதுவை நகர மற்றும் கிராம அமைப்பு துறை, புதுவை நகர அமைப்பு குழுமம் சார்பில், அரசு துறை அதிகாரிகளுக்கு, பொதுத்துறையில் திட்டமேலாண்மை மற்றும் திட்ட இடர் மேலாண்மை என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நேற்று காலை நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசகர் பிரேம் சிங் கலந்து கொண்டு புதுவை அரசு அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளித்தார். இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர அமைப்பு துறை செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார்

சிறப்பு விருந்தினராக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் பயிற்சி அளித்த மத்திய அரசு நிதி ஆயோக் ஆலோசகர் பிரேம்சிங்குக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது,

பயிற்சி என்பது நம்மை செதுக்கி சிறப்பாக செயல்பட வைக்கிறது. முறையான பயிற்சி தன்னம்பிக்கையை தருகிறது. எந்த ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, அதனை எப்படி செய்வது, எப்போது தொடங்கி முடிப்பது என மனதில், கணக்கிட்டு அதனை செய்து முடிக்க வேண்டும். நன்கு பயிற்சி பெற்றவர்கள் பிரச்சினைகளை பார்த்து பக்குவப்படுகின்றனர்.

நான் இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு ரகசியம் உள்ளது. அது உழைப்பு மட்டுமே. எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் நீங்களும் ஒரு சிறந்த இடத்துக்கு வர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகர அமைப்பு துறை, நகர அமைப்பு குழுமம், குடிசை மாற்று வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News